30/07/2021
பாரதத்தை பாம்பாட்டிகளின் நாடு என நினைத்து கொண்டிருந்த மேற்கு நாட்டவர், சிலருக்கு விவேகானந்தர் உரைகள் வியப்பூட்டின. மூன்றரை ஆண்டுகள் 1897 ஜனவரி வரை, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்சு போன்ற தேசங்களில் பயணம் செய்து அறவுரைகள் ஆற்றினார் விவேகானந்தர். குட்வின் என்ற ஆங்கில சுருக்கெழுத்தாளர், விவேகானந்தரின் அறஉரைகளை, எழுச்சி உரைகளை எழுதி வைத்து, மனித குலத்திற்கு பெரும் தொண்டாற்றினார். பல மேலை நாட்டு அறிஞர்கள், பேராசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் விவேகானந்தரின் சீடராகி, அவர் பணி தொடர வழிவகுத்தனர். மார்க்கெரட் நோபல் என்ற ஐரிஷ் பெண்மணி, அவரது மாணவியாகி சகோதரி நிவேதிதை என பெயர் சூட்டப்பட்டு, பாரதம் வந்து, தன் கடைசி மூச்சு வரை தொண்டு புரிந்தார்.விவேகானந்தர் 1897 ஜனவரியில் இலங்கை வழியாக தாயகம் திரும்பினார். பானகர சேதுபதி ஆண்ட ராமநாதபுரம் சமஸ்தானத்தில் முதலடி எடுத்து வைக்க வேண்டும் என விவேகானந்தர் விரும்பினார்.
1897 ஜன., 26 ராமநாதபுரம் அருகே குந்துகாலில் விவேகானந்தர் கப்பலில் வந்து இறங்கினார். பாஸ்கர சேதுபதி தலைமையில் மக்கள் அவரை வரவேற்றனர். விவேகானந்தர் ஏறி வந்த சாரட்டு வண்டியின் குதிரைகளை அவிழ்த்து விட்டு தானே அதை இழுத்து மரியாதை செலுத்தினார். ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, குடந்தை வழியாக சென்னைக்கு ரயிலில் சென்றார் விவேகானந்தர். பாரதத்தின் எதிர்காலம், அதன் கடந்த காலத்தை விடஒளிமயமாக இருக்கும் என பேசினார். சென்னையில் இன்று விவேகானந்தர் இல்லம் என்று புகழ்பெற்ற, ஐஸ் ஹவுஸில் ஒன்பது நாட்கள் தங்கி வீர உரைகளை அவர் ஆற்றினார். 1897பிப்., கொல்கட்டா புறப்பட்டார். அவரது உரைகள், "இந்திய பிரசங்கங்கள்' என பெயரில் புகழ்பெற்றன. 1897ல் தொண்டும் துறவும் என்ற மைய சிந்தனையுடன், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் என்ற ஆன்மிக தொண்டு நிறுவனம், சுவாமி விவேகானந்தரால் துவங்கப்பட்டது.
பஞ்சம், பிளேக் நேரத்தில் நிவாரண பணிகளையும் ஆற்றினார் விவேகானந்தர். இறுதி மூச்சு வரை தெய்வ பணி, மனித நேய பணி செய்து, 1902 ஜூலை 4ல் உடலை விட்டு சென்றார். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரது உபதேசங்களை படித்து, தேச விடுதலை பணியில் ஈடுபடுகின்றனர். கல்வி, மருத்துவம், நிவாரண பணி மூலம் இறை வழிபாடு, தொண்டு மூலம் தேசபக்தி, தேசத்தை மறுமலர்ச்சி பெற செய்யும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
நற்பணி செய்யும் விவேகானந்த கேந்திரம் : சுவாமி விவேகானந்தர் தவம் செய்த புனித பாறை கன்னியாகுமரியின் முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் உள்ளது. அதை விவேகானந்தர் பாறை என்றே அழைக்கின்றனர். 1963ல் ஏக்நாத் ரானடே என்பவர், நன்கொடை பெற்று, காரைக்குடி எஸ்.கே.ஆச்சாரி தலைமையில் இந்த நினைவுச் சின்னத்திற்கான பணி நடந்தது. 1970ல் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் தலைவர், ஜனாதிபதி நினைவுச் சின்னத்தை தேசத்திற்கு அர்ப்பணித்தனர். சுவாமி விவேகானந்திற்கு உண்மையான நினைவுச் சின்னம் எதுவாக இருக்க முடியும்? அவரின் அறவுரைகளை நெஞ்சில் நிறுத்தி, மக்கள் பணிசெய்வதே அது. எனவே ஏக்நாத் ரானடே விவேகானந்த கேந்திரம் அமைப்பை நிறுவினார். அது கன்னியாகுமரியை தலைநகராகக் கொண்டு நாடு முழுவதும் நற்பணி செய்கிறது. பட்டதாரி இளைஞர்கள் ஆயுள்கால தொண்டர்களாக சேர்த்து செயல்படுகின்றனர்.
அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், அந்தமானில் 57 பள்ளிகளை நடத்துகிறது. மருத்துவமனைகள், கிராம முன்னேற்ற திட்டங்கள், இயற்கை வளஅபிவிருத்தி திட்டம், அஸ்ஸாமில் பண்பாட்டு வளர்ச்சி மையம், டில்லியில் பன்னாட்டு விவேகானந்த பவுண்டேஷன், கேரளா, கொடுங்கல்லூரில் வேத தரிசன மையம், காஷ்மீரில் ஒரு மையம், தமிழகம், மகாராஷ்டிரா, ஒடிசா,அசாம், அருணாச்சல மாநிலங்களில் கிராம முன்னேற்ற பணிகள் நடக்கின்றன. நம் பண்பாட்டை மையமாக கொண்ட வளர்ச்சி என்பதே விவேகானந்த கேந்திரத்தின் முக்கியப் பணி. இதன் 210 கிளைகள் இந்தியாவின் 18 மாநிலங்களில் பணியாற்றுகின்றன. இளையோர் நன்னூல் விவாதக்குழு, யோகா வகுப்பு, பஜனை வகுப்பு நடத்தப்படுகிறது. நன்னூல் விற்பனையும் கேந்திரத்தின் பணிகளில் ஒன்று. கேந்திர பத்திரிகை, யுவபாரதி ஆங்கில இதழ்கள், விவேகவாணி தமிழ் இதழ், சென்னை வெளியீடு, மராத்தி, குஜராத்தி, இந்தி, அஸ்ஸாம், மலையாள பத்திரிகைகள் வெளியாகின்றன. இப்பணிகள் பொதுமக்களின் பொருளாதார ஆதரவுடன் நடக்கின்றன.